Friday, August 5, 2011

திரையுலகில் 20-வது ஆண்டினைத் தொட்ட அஜித்குமார்!

Ajith_latest
‘தல’ என்று அவருடைய ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்குமார் திரையுலகில் நடிக்க வந்து, இன்றோடு இருபது ஆண்டுகள் ஆகிறதாம். 1992-ல் வெளிவந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குப் படத்தில் முதன் முதலில் அறிமுகமான இவர், 1993-ல் வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஆசை, வான்மதி, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, நீ வருவாய் என, அமர்க்களம், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், தீனா, சிட்டிசன், ரெட், வில்லன், வரலாறு, பில்லா என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
இதனிடையே பல ஏற்ற இறக்கங்களை சந்திருப்பினும், தற்போது ‘நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். இவரது 50-வது படமான ‘மங்காத்தா’ இந்த மாத இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. இவரது 51-வது படமான ‘பில்லா 2’ படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏழாம் அறிவு

7aam-Arivu
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் ‘ஏழாம் அறிவு’.
இப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக ‘நாடோடிகள்’ படத்தில் நடித்த அபிநயா நடிக்கிறார்.
விஞ்ஞானி, சர்க்கஸ் கலைஞர், புத்த பிட்சு என்று மூன்று வேடங்களில் சூர்யா நடித்து அசத்த இருக்கிறார். கஜினி படத்தில் வித்தியாசமான வில்லனை அறிமுகப்படுத்திய ஏ.ஆர். முருகதாஸ், இப்படத்தில் வியட்நாமிலிருந்து வில்லனை இறக்குமதி செய்திருக்கிறார்.
இவரது பெயர் ஜானி ட்ரி நுயன் (Johnny Tri Nguyen). கராத்தே, குங்பூ உள்ளிட்ட பலவிதமான தற்காப்புக் கலைகளை கற்றிருக்கிறார் ஜானி. ‘கிராடில் 2 தி கிரேவ்’ (Cradle 2 the Grave) என்ற ஹாலிவுட் படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். ஸ்பைடர் மேன் – 2 படத்தில் ஸ்பைடர்மேனுக்கு டூப் போட்டு நடித்தவர் என பல சிறப்புகளை உடையவர் ஜானி.
சூர்யாவிற்கு வில்லனாக ஜானியை இறக்குமதி செய்திருக்கிறார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருப்பது மட்டுமின்றி, நமது முதுகுத் தண்டையே சில்லிட வைத்து விடுமாம்.
இப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சியில், வில்லன் நடிகர் ஜானி டிரை நுயென்னுடன் மோதுகிறார். இந்த சண்டைக் காட்சியை குங்பூ தற்காப்பு கலையை மையமாக்கி எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
எந்திரன் படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்த நிறுவனத்தில்தான், இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளையும் வடிவமைத்திருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். எந்திரனை விட பலமடங்கு இப்படம் கிராபிக்ஸில் மிரட்ட இருக்கிறதாம்.

7aam-Arivu1

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கா 1000 நடனக்கலைஞர்கள் ஆடியிருக்கிறார்கள். பல வகையிலும் இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ்.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவை கவனித்துக் கொள்ள, ஆண்டனி படத்தொகுப்பு வேலையினை செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜூலை மாத இறுதியில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. அறிவியல் புனைகதையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டனவாம். தற்போது போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்டு மாத இறுதியில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேநீர் விடுதி - திரை விமர்சனம்

 தேநீர் விடுதி
சென்னை, ஜுன் 2 (டிஎனஎஸ்) இசையமைப்பாளர் எஸ்.எஸ் குமரன் இயக்குநராகும் முதல் படம். ஒரு இசையமைப்பாளராக வெற்றி பெற்ற குமரன், கொஞ்சம் அவசரப்பட்டு இயக்கம், தயாரிப்பு என்று களத்தில் இறங்கி விட்டாரோ! என்று நினைக்க தோன்றும் அளவுக்கு இருக்கிறது தேநீர் விடுதி படம். www.kiyaguru.blogspot.com

தற்போது தமிழ் சினிமாவில் எதார்த்தம் என்ற வார்த்தையை மனதில் வைத்துகொண்டு ரசிகர்களை வாட்டி வதைக்கும் சில கிராமத்து கதைகளைப்போலத்தான் தேநீர் விடுதி படத்தின் கதையும் அமைந்திருக்கிறது.

எப்போது குடி, கும்மாளம் என்று திரியும் பந்தல் வேலைக்காரனுக்கும், தனது பெண்ணை ஒரு அமெரிக்க மாப்பிள்ளைக்குத் தான் கட்டிக் கொடுப்பேன் என்ற லட்சியத்தோடு வாழும் சார்ப்பதிவாளரின் மகளுக்கும் இடையே ஏற்படும் காதலும், அதன் பின்னணியும் தான் கதை. இதில் இவர்களது காதல் வென்றதா? அல்லது சர்பதிவாளரின் லட்சியம் வென்றதா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

இந்த ரெகுலர் ஃபார்மாட்டை வைத்துகொண்டு பயணித்திருக்கும் இயக்குநர், கதாபாத்திரங்களின் தேர்வு, அழகிய கிராமம் என்ற விஷயத்தில் அசத்தியிருந்தாலும், நடிகர்களிடம் நடிப்பை வாங்குவதிலும், காட்சிகளிலும் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார்.

எந்த நேரமும் போதையில் திரியும் ஹீரோ ஆதித், தனது முதல் படத்தை காட்டிலும் இதில் நடிக்க, காமெடி பண்ண என அனைத்து வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார். நாயகி ரேஷ்மி தனது அழகுக்கு ஏற்றவாறு பாவணைகளையும் காட்டி அசத்தியிருக்கிறார். மாடர் டிரஸ்ல மட்டுமல்ல பட்டு பாவாடையிலும் பளிச்சென்று இருக்கிறார்.

ஹீரோவுக்கு அண்ணனாக வரும் கொடுமுடி சுரேஷ், ரசிகர்களை சிரிக்க வைக்க ரொம்பவே முயற்சி செய்திருக்கிறார். சில இடங்களில் இவருடைய உடல்மொழியை பார்த்து சிரிப்பு வந்தாலும், போக போக அதுகூட அலுப்பு தட்டுகிறது.

ஹீரோயினின் அண்ணன்களாக நடித்திருக்கும் இருவரில் குணாவின் சீரியஸ் பார்வைகூட நம்மை சிரிக்க வைக்கிறது. இவர்களைத் தவிர படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்க மறுக்கிறது.

தான் ஒரு இசையமைப்பாளர் என்பதால் படத்தில் பாடல்களை திணிக்காமல் தேவைப்பட இடங்களில் மட்டும் அளவான பாடல்களை கொடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

நகைச்சுவை என்பதை பிரதானமாக வைத்து திரைக்கதையை அமைத்திருக்கும் குமரன், அதற்கு ஏற்றவாறு நடிகர்களிடம் நடிப்பை வாங்கியிருந்தால் படம் ரசிகர்களின் மத்தியில் கைதட்டல்களை வாங்கியிருக்கும். ஒரு இசையமைப்பாளராக குறுகிய காலத்தில் வெற்றி பெற்ற எஸ்.எஸ்.குமரன், ஒரு இயக்குநராக வெற்றி பெற இன்னும் சில விஷயங்களை கற்றுகொள்ள வேண்டியது இருக்கிறது.

இதை விட ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருப்பது படத்தின் தலைப்பான 'தேநீர் விடுதி' க்கும் படத்திற்கும் என்ன சம்மந்தம் என்பதுதான்.

வெப்பம் திரை விமர்சனம்


 வெப்பம்
சென்னை, ஆக.2 (டிஎன்எஸ்) இயக்குநர் கெளதம் மேனனின் உதவியாளரான அஞ்சனா இயக்கியிருக்கும் முதல் படம். சென்னை குடிசைப் பகுதியை கதைக்களமாக எடுத்துகொண்ட அஞ்சனா, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று சொல்லும் அளவுக்குத்தான் படம் இருக்கிறது.

சாப்பாட்டுக்கு கூட காசு கொடுக்காமல் குடித்து கும்மாளம் போடும் அப்பா, நோயால் வாடும் அம்மா இவர்களுடைய பிள்ளைகள் நானியும், முத்துக்குமாரும். அறியாத வயதில் நோய் வாய்ப்பட்ட தனது அம்மாவின் தற்கொலைக்கு காரணமாகும் முத்துக்குமார், வளர்ந்து பெரியவனானதும் தனது அப்பாவை கொலை செய்கிறார். இதற்கிடையில் நடைபெறும் காதல், மோதல், நட்பு, கஞ்சா கடத்தல் சம்பவங்கள்தான் படம்.

படத்தில் இடம் பெறும் அனைத்து கதாபாத்திரங்களும் அழுத்தமாக அமைந்தாலும், கார்த்திக், நானி, பிந்து மாதவி இவர்களைத் தவிர மற்றவர்கள் மனதில் நிற்கவில்லை. மற்றொரு நாயகியான நித்யா மேனன் குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணாக நடித்திருக்கிறார். ஆளும் வளரல அவருடைய நடிப்பும் வளரல என்று சொல்லும் அளவுக்கு இந்த கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்.

ஜோஸ்வ ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் இனிமை ரகம் என்றால், பின்னணி இசை சுமார் ரகம். ஓம் பிரகாஷின் கேமரா சந்து பொந்து என்று பறந்தாலும், காட்சிகளை பக்குவமாக படமாக்கியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பமே கதையை யூகிக்க வைக்கிறது. சரி போக போக சுவாரஸ்யம் இருக்கும் என்றால், எங்கே போகிறது என்று புரியாமல் புலம்பவைக்கிறது திரைக்கதை. குறிப்பாக படத்தில் இடம்பெறும் குட்டி குட்டி பிளாஸ்பேக் காட்சிகளை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

திரைக்கதையில் வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் அப்படியே, சுவாரஸ்யத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால், வெப்பம் வெற்றி பெற்றிருக்கும்.

காஞ்சனா – திரைவிமர்சனம்

kanchana
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவன முனி படத்தின் இரண்டாம் பாகம்தான் ‘காஞ்சனா’. இனி கதைக்கு வருவோம். ராகவா லாரன்ஸ் கிரிக்கெட் விளையாடுவதில் கில்லியாக இருக்கிறார். ஆனால் இருட்டைக் கண்டாலே அலறி ஓடிவிடுவார். தன் அம்மா, அண்ணன் ஆகியோருடன் வசித்து வரும் ராகவா லாரன்ஸின் பொழுது போக்கே கிரிக்கெட் விளையாடுவதுதான்.
அப்படி கிரிக்கெட் விளையாட இடம் கிடைக்காமல், தேடி அலைந்து ஒரு புதிய இடத்தைக் கண்டு பிடிக்கிறார். அந்த இடத்தில் அனைவரும் கிரிக்கெட் விளையாடிவிட்டு திரும்புகின்றனர். அப்படி வீட்டிற்கு திரும்பும்போது, அவர் வைத்திருக்கும் ஸ்டம்பில் ரத்தக்கறை படிந்திருப்பதை ராகாவா லாரன்ஸ் கவனிக்கத் தவறுகிறார்.
இதனிடையே மச்சினிச்சியாக வரும் லட்சுமிராயுடன் காதல் ஏற்படுகிறது. இடை இடையே இவர்களது காதல் குறும்புகளும் தொடர்கிறது.
சிலநாட்களுக்குப் பிறகு அவருக்குள் அமானுஷ்ய சக்திகள் புகுந்து கொண்டு சித்து வேலை காண்பிக்கின்றன. ஆணாக இருக்கும் லாரன்ஸ் திடீரென்று வளையல் அணிவதும், சேலை கட்டுவதும், மஞ்சள் தேய்த்து குளிப்பதுமாக இருக்கிறார்.
இதைனைக் கண்ட லாரன்ஸின் அம்மாவான கோவை சரளா, தன் மகனிடம் ஏதோ ஒரு விபரீதம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, அவரை முஸ்லீம் சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார். அங்குதான் அவர் மீது ஆவி இருக்கிறது என்று தெரியவருகிறது.
பிளாஷ்பேக் ஆரம்பமாகிறது. சரத்குமார் ஆணாகப் பிறந்தாலும், பருவமாற்றத்தால் திருநங்கையாக மாறி காஞ்சனா என்று பெயர் வைத்துக் கொள்கிறார். இதனால் வீட்டிலிருந்து துரத்தப்படுகிறார். எல்லோராலும் உதாசீனப்படுத்தப்படுத்துகிறார். இதனால் மனம் வெறுத்து தனித்து வாழ ஆரம்பிக்கிறார். அதுமட்டுமின்றி தன்னைப் போலொரு திருநங்கையை தத்தெதடுத்து, டாக்டருக்கு படிக்க வைக்கிறார்.
அங்குள்ள ஏழை மக்களுக்காக 25 லட்ச ரூபாய் செலவில் மருத்துவமனை கட்ட, ஒரு இடத்தை வாங்குகிறார் காஞ்சனா. அதே இடத்தின் மேல் ஒரு கண்ணாக இருக்கும் லோக்கல் எம்.எல்.ஏ, அந்த இடத்தை அபகரிப்பது மட்டுமின்றி காஞ்சனா, அவரது குடும்பத்தினர் என மூன்று பேரை படுகொலை செய்து புதைத்து விடுகிறார்.
அந்த மூன்று பேரும் புதைக்கப்பட்ட இடத்தில்தான் ராகவா லாரன்ஸ், ஸ்டம்ப் நட்டு விளையாடியிருக்கிறார். அப்போதுதான் அந்த ஆவிகள் அவருடைய உடலில் புகுந்திருக்கின்றன என்பதை கண்டுபிடிக்கிறார்கள். தங்களை கொலைசெய்த எம்.எல்.ஏவை பழிவாங்க துடிக்கிறாள் காஞ்சனா.
அவளின் பழி வேட்டை தீர்ந்ததா, ராகவா லாரன்ஸ் மீண்டும் இயல்பான மனிதாக மாறினாரா? லட்சுமி ராயுடன் அவருடைய காதல் என்ன ஆனது? என்பதை விறுப்பாக சொல்லி படத்தை முடித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் முனி பாகம் இரண்டு கலக்கலாகத்தான் இருக்கிறது. அவரது நடிப்பும், ஆக்ரோஷமும், திருநங்கையாக மாறியபின் அவர் காட்டும் நளினமும் பளிச். நடனத்தில் மனிதரைக் கேட்கவே வேண்டாம் பின்னி எடுத்துவிடுகிறார்.
சிலகாட்சிகளே வந்தாலும் நம்ம சரத்குமாரா இது என்று வாய் பிளக்க வைக்கிறார். இமேஜிற்குள் சிக்காமல் திருநல்கை வேடத்தை துணிச்சலாக ஏற்றது மட்டுமின்றி, தத்ரூபமாக நடித்தமைக்கு அவருக்கு தாராளமாக கைதட்டல் போடலாம்.
Kanchana_Movie
கவர்ச்சிக்கும், காதலுக்கும் மட்டும் வந்து போகிறார் ல்ட்சுமிராய். லாரன்ஸ் உடன் அவர் அடிக்கும் காதல் லூட்டிகள் ரசிக்கும் படி இருக்கிறது. பாடல் காட்சியின் போது லாரன்ஸை இடுப்பில் தூக்கி வைத்தபடி ஆடுவது புதுமை.
லாரன்ஸின் அம்மாவாக வரும் கோவை சரளா நடிப்பில் பட்டாசு கிளப்புகிறார். பயந்தாங்கொள்ளி மகனைப் பெற்றதற்காக, அவரிடம் மாட்டிக் கொண்டு அவர் படும் பாடு, நமக்கு குபீர் சிரிப்பை வரவைழைக்கிறது.
இப்படத்தின் முதுகெலும்பே இசையும், ஒளிப்பதிவும். தமனின் இசையமைப்பில் திகில் காட்சிகள் திடுக் திடுக்கை வரவழைக்கின்றன. வெற்றியின் ஒளிப்பதிவு இரவிலும் விழித்திருக்கும் நிலவாக காட்சிகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.
ஸ்ரீமன், தேவதர்ஷினி, மனோ பாலா, தேவன் என அவரவர்களுக்கு கொடுகப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
திருநங்கைகள் படும் துயரினை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியிருக்கும் ராகவா லாரன்ஸிற்கு கண்டீப்பாக சபாஷ் போட்டே தீரவேண்டும். சரத்குமாரின் அதிரடி நடிப்பும், ராகவா லாரன்ஸின் மிரட்டல் நடிப்பும், சுப்பர் சுப்பராயனின் சண்டை அமைப்பும், தமனின் திகலூட்டம் இசையும் நம்மை கட்டிப் போட்டு வைத்து விடுகின்றன.
திகில் பட ரசிகர்களுக்கு மட்டுமின்றி தைரியமான குழந்தைகள் வரை ரசிக்கும் படியான படத்தை கொடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்

தெய்வத் திருமகள் - திரை விமர்சனம்

Deiva-thirumagan-cinema-review

5 வயது சிறுவனின் மனநிலை கொண்ட கிருஷ்ணாவாக வருகிறார் சீயான் விக்ரம். அவரது 5 வயது மகள் நிலா. சில நிகழ்வுகளால் விக்ரமிடமிருந்து நிலா பிரிக்கப்படுகிறாள். அவளைத் தேடி அலையும் கிருஷ்ணா, வழக்கறிஞரான அனுஷ்காவிடம் போய் சேர்கிறார்.
நல்லதொரு வழக்கிற்காக காத்திருக்கும் அனுஷ்கா, இந்த வழக்கை கையிலெடுக்கிறார். இந்த வழக்கின் மூலம் பணம் கிடைக்கும் என எதிர்பார்த்த அனுஷ்காவிற்கு, விக்ரமின் மனநிலையை அறிந்ததும் அவரை விட்டு விட்டு போய்விடுகிறார். சில சந்தர்ப்பங்களால் விக்ரமின் கதையை அனுஷ்கா கேட்க நேரிடுகிறது.
அப்போது அவருக்கு குழந்தை பிறந்ததும் அவரது மனைவி இறந்து விடுவதும், விக்ரம் மனநிலை குன்றியவராக இருப்பினும், தான் ஒருவரே குழந்தையை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்ததும், பின் அவரது மாமனாரால் ஏமாற்றப்பட்டு, குழந்தையை அவர்களிடம் பறிகொடுத்து விடுவதும் தெரியவருகிறது.
இதையடுத்து நீதிமன்றத்தின் மூலம் விக்ரமின் மகளை விக்ரமுடன் ஒருமணி நேர சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதில் வெற்றி பெறுகிறார் வழக்கறிஞரான அனுஷ்கா.
அன்னை இல்லாத காரணத்தால், அக்குழந்தை தந்தையிடம் வளர வேண்டும் என்று நீதிமன்றம் மூலம் நிலாவை விக்ரமிடம் பெற்றுத் தர முயல்கிறார் அனுஷ்கா.
விக்ரமின் மாமனார் தரப்பில் வழக்கறிஞராக வரும் நாசர் எந்த வழக்கிலும் வெற்றியையே சந்தித்திருப்பவர், மனநிலை குன்றியவரிடம் குழந்தை எப்படி ஒப்படைப்பது என்று வாதிடுகிறார்.
deiva-thirumagan2

இந்த வழக்கின் முடிவு என்ன? கிருஷ்ணாவிற்கு அவரது குழந்தை நிலா கிடைத்தாளா? மனநிலை குன்றிய விக்ரமை விடுத்து அவரது மாமனாரிடம் நிலா சென்றாளா? என்பதை உணர்ச்சி பூர்வமான முடிவை சொல்லியிருக்கிறார்கள். இந்த பத்து நிமிட கிளைமாக்ஸ் காட்சியை பார்ப்பவர்களின் இதயம், எவ்வளவு இரும்பாக இருந்தாலும் அதனை இளகிய கண்ணீராக மாற்றிவிடுகிறது என்பதை நாம் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். உணர்வுகளும், பாச உணர்ச்சிகளும் இந்த பத்து நிமிடத்தில் நம்மை வசியம் செய்து விடுகின்றன.
சீயான் விக்ரம், இப்படத்தில் 5 வயது கிருஷ்ணாவாக வாழ்ந்திருக்கிறார். ‘மூன்றாம் பிறை’யில் ஸ்ரீதேவி போல, இப்படத்தில் விக்ரம் வாழ்ந்திருக்கிறார். இதற்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்றே சொல்லலாம். குழந்தைக்கு கதை சொல்வது,. கண்ணுங் கருத்துமாய் பார்த்துக் கொள்வது என மனிதர் அசத்தியிருக்கிறார்.
இப்படத்தின் மையமே 5 வயது மகளாக வரும் சாரா என்ற குழந்தைதான். இவளைச் சுற்றித்தான் கதையே நகர்கிறது. படம் பார்ப்பவருக்கு இது நம்முடைய குழந்தை என்று அன்பு கொள்ளும் அளவிற்கு மிகவும் இயல்பாய் நடித்து அசத்தியிருக்கிறாள். சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதினை இந்த சிறுமி தட்டிச் செல்வாள்.
வழக்கறிஞராக வரும் அனுஷ்கா, அவருக்கு உதவியாளராக வரும் சந்தானம். இந்த கூட்டணி முன்பாதியில் காமெடியில் களை கட்டுகிறது. பின்பாதியில் விக்ரமிற்காக போராடும் போது, பாராட்ட வைக்கிறது. அனுஷ்காவிற்கு மிகவும் பொறுத்தமான வேடம். கலக்கியிருக்கிறார்.
நிலாவின் ஸ்கூல் கரெஸ்பாண்டென்டாக வரும் அமலா பால், இறந்து போன தனது அக்காவின் குழந்தைதான் நிலா என்று தெரிய வரும்போது அவர் காட்டுகிற அன்பு நம்மை அசர வைக்கிறது. அவ்வளவு இயல்பு, மைனாவிற்கு அடுத்த படத்தில் மிகவும் தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
deiva-thirumagan1

நாசர் தன் பங்கிற்கு தனது வேலையை கன கச்சிதமாகவும் கம்பீரமாகவும் செய்து முடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது எனலாம். உணர்ச்சி மயமான காட்சிகள் வரும் போது தனது பின்னணி இசையால் அதற்கு உயிரூட்டி இருக்கிறார். பாடல்களும் மெல்லிசை கலந்த தாலாட்டாக காதில் ரீங்காரமிடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது பின்னணி இசை, நம்மையறியாமல் நம்மை உருக வைத்துவிடுகிறது.
விக்ரமின் குரலில் ‘கதை சொல்ல போறேன்.. ஒரு கதை சொல்லப் போறேன்” பாடல் நிச்சயம் குழந்தைகளுக்கு பிடித்த பாடலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு ஊட்டியை அடுத்துள்ள அவலாஞ்சி கிராமத்தை, தனது கேமரா கண்களால் சிறைபிடித்து நம் கண்ணில் உலவ விட்டிருக்கிறது. மெல்லிசைத் தாலாட்டாக வரும் ‘விழிகளில் ஒரு வானவில்’ பாடலில் ஒளிப்பதிவாளரின் கோணங்களை, தனது படத்தொகுப்பு திறமையில் செதுக்கியிருக்கிறார் ஆண்டனி.
‘மதராசபட்டினம்’ என்ற படத்தைக் கொடுத்த விஜய், ஒரு தந்தை-மகளின் பாசப் போரட்டத்தை மிகவும் உணர்ச்சிமயமாகவும், தனது அட்டகாசமான திரைக்கதையாலும் தெய்வத்திருமகளை நம்முன் உலவ விட்டிருக்கிறார்.
அவரது உழைப்பு, அனைவரின் நடிப்பு அனைத்தும் குடும்பமாய் வாழ்கின்ற அனைத்து தரப்பு ரசிகர்களின் அரவணைப்பையும் பெறும்.
இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகின்ற இந்த நீளமான படத்தை, தனது உணர்ச்சிகரமான திரைக்கதையால் அதை மறக்கடிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர் விஜய். அதற்கு தனது இசையால் உரம் சேர்த்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ரத்தமும், கலவரமும், சதையும், கவர்ச்சியையும் நம்பி உலா வரும் படங்களிடையே, நம்முள் உறைந்து கிடக்கும் பாச உணர்வுகளை, 'தெய்வத்திருமகள்' மூலமாய் உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கும் விஜய்க்கு ஆயிரம் முறை சபாஷ் போடலாம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவான குடும்பப் படத்தை பார்த்த திருப்தியை இந்த ‘தெய்வத்திருமகள்’ நமக்குத் தருகிறாள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்களுக்கு பிடித்தவை